சனி, 22 மே, 2021



புத்தகத்தின் பெயர்:- 1984 சீக்கியர் கலவரம்.
ஆசிரியர் :- ஜெ. ராம்கி
பக்கங்கள் :- 143
பதிப்பகம்:- கிழக்கு பதிப்பகம்.
தொலைபேசி:- +91 44 4200 9603
விலை:- 175/-

*31 அக்டோபர் 1984 * காலை 9.20 மணிக்கு மிக அருகாமையில் வந்த அன்றைய பாரதப் பிரதமர் *இந்திரா காந்தியை *பியாந்த் சிங்* தனது பிஸ்டலால் 3 முறை சுட்டார். கீழே விழுந்த இந்திராவை நோக்கி வந்த *சத்வந்த் சிங்**தனது ஸ்டென் துவக்கால் 30 றவுண்ட் சுட்டார்.

*நாங்கள என்ன செய்ய வேன்டுமோ அதனைச் செய்து விட்டோம். இனி நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதைச் செய்யுங்கள்.*என்று பியாந்த் சிங் சொல்லி தங்கள் துப்பாக்கிகளை கீழே போட்டுவிட்டு சரணடைகிறார்கள்.

நூல் ஆசிரியர் ராம்கி பல கோணங்களில் தனது எழுத்துக்களை நகர்த்துகிறார் என்றே எனக்குத் தெரிகிறது. இந்த சீக்கியக் கலவரம் இந்திரா அம்மையார் சுடப்பட்டதைக் காரணம் காட்டி, இந்திரா காங்கிரசால் அதன் மிக முக்கியமான பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களால் திட்டமிடப்பட்ட கொலைக் கலவரம் என்றே கூற வருகிறார். அதற்குரிய பல ஆதாரங்களையும் சரியான இடங்களில் அள்ளித் தருகிறார்.

ஆசிரியர் ராம்கி, 15 சிறிய தலைப்புகளில் கீழ் இக் கலவரத்தை மிக விரிவாக ஆராய்ந்து எழுதியுள்ளார்.
முக்கியமாகப் பஞ்சாப் சீக்கியர் பற்றியும் அவர்களது வாழ்க்கை முறை, அவர்களது கலாச்சாரம், மதம், அவர்களது இனப்பாகுபாடு போன்றவற்றைத் தெளிவு படுத்துகிறார்.

பஞ்சாப் என்ற மாகாணம் அமைவதற்கு முன் அதாவது பஞ்சாப் பிரிவினைக்கு முன் எப்படி என்றும் பிரிவினைக்குப் பின் எப்படி என்றும் நாம் 2 தலைப்புகளில் அறியக் கூடியதாகவுள்ளது. இது பஞ்சாப் பற்றிய அறிமுகம் என்று சொல்லலாம்.

மேலும், இந்திரா காந்தியை கொலை செய்வதற்கு மிக முக்கியமான காரணமாக இருந்தது *புளு ஸ்டார்* எனப்படும் அவர்களது *பொற் கோவில் இராணுவ நடவடிக்கை* தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் முழு விபரங்களையும் நண்பர்களே, இப் புத்தகத்தின் வாசிப்பு முலம் அறியலாம்.

மேலும் இப் புத்தக வாசிப்பின் மூலம், 1965 ல் ஏற்பட்ட பாகிஸ்தான் போருக்குப் பின்னர் 11.11.1966 ல் ஏற்பட்ட புதிய மானிலங்கள் பற்றிம், பின்னர் ஏற்பட்ட அவர்களது பொருளாதார மற்றும் வாழ்க்கை முன்னேற்றம், எப்படி உயர்ந்து என்றும் பல தரவுகள் மூலம் விரிவாகக் காணலாம். அதனைத் தொடர்ந்து *1971* ல் தமக்கென ஒர தனிநாடு தோன்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, *காலிஸ்தான்* என்ற தேசத்தை உருவாக்கி, தனிப்பட்ட அரசாகவும் இயங்க ஆவேசம் கொண்டனர்.

நண்பர்களே, இப் புத்தகத்தில் ஆசிரியர் *அக்டோபர் 31. நவம்பர் 01.நவம்பர் 02 * ஆகிய திகதிகளில் நடைபெற்ற கொடூரங்களைத் தான் இங்கு வாசிக்கவே முடியவில்லை. காரணம், அதாவது இந்திரா அம்மையார் சுடப்பட்ட சில மணிநேரத்தில் தொடங்கிய இனக் கலவரம் 3 நாட்களில் பல ஆயிரக்கணக்கான வீடுகளும், உடமைகளும் கொள்ளையடிக்கப்பட்டு, பல ஆயிரம் சீக்கியர்கள் கொல்லப்பட்ட சம்பவங்களை வாசிக்கும் போது உண்மையிலேயே கண்கள் கலங்காத உயிர்கள் இருக்காது என்றே தோன்றுகிறது.

இதிலே, கொலைகாரக் கும்பல் பயன்படுத்திய மிக முக்கியமான ஆயுதம் கெரசீன் மற்றும் பெற்றேல் எரிவாயு என்பதை வாசிக்கும் போது, உயிருடன் பல சீக்கியர் குடும்பங்கள் கொளுத்தப்பட்டது ஊர்ஜிதம்..

இனப்படுகொலைகளும் திட்டமிட்டபடி நடந்ததற்கு பல காரணங்கள் உண்டு. அவற்றிலும் சீக்கிய இனத்தில் 2 வகைகள் உண்டு. அவற்றில் வறுமைக் கோட்டிற்குட்பட்ட சீக்கியர்களே மிகவும் பாதிக்கப்பட்டனர். *திரிலோக்புரி* யில் நடைபெற்ற கொடுமைகள் எண்ணிலடங்காது. இந்த இனப் படுகொலைகள் பல மானிலங்களில் இடம் பெற்றாலும், ஆசிரியர் இதில் குறிப்பிட்டு எழுதியிருப்பது முழுக்க முழுக்க *டெல்லி*யில் நடைபெற்ற சம்பவங்களையே.

அதன் பின் ராஜீவ் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட பல கமிட்டிகள் செயலற்றுப் போன சம்பவங்கள், ஒன்றுக்குப் பல முரணான, அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அவை எப்படி வருடக் கணக்கில் இழுபறியாகி பின் நீறு பூத்த சாம்பல் போல் ஆனது போன்ற நிறைய சங்கதிகளை இப் புத்தகம் விரிவாக எடுத்துரைக்கிறது.

நண்பர்களே, எல்லாம் எழுதிவிட்டால் வாசிக்கும் உங்கள் மனதை திசை திருப்ப சந்தர்ப்பம் அமையலாம். எனவே தன்னம்பிக்கையுடன் கண்டிப்பாக எல்லோரும் வாசித்து, இந்த உண்மைச் சம்பவங்களைக் கட்டாயம் அறிய வேண்டும், அது பற்றி சிறிது சிந்திக்க வேண்டும் என்று கூற விரும்பறேன்..
நன்றிகள்
பொன் விஜி - சுவிஸ்

 

 


புத்தகத்தின் பெயர்:- *இக்கிகய்*
ஆசிரியர் :- ஹெக்டர் கார்சியா & பிரான்செஸ்க் மிராயியஸ்.
தமிழில் :- PSV குமாரசாமி.
பக்கங்கள் :- 174.
பதிப்பகம்:- மஞ்சுள் பப்ளிஷிங் கவுஸ்
விலை:- கின்டல் விலை
வாங்குமிடம்:- கின்டலில்.


நண்பர்களே!
*ஹரா ஹாசி பூ* என்றால் என்ன என்று என்னைக் கேட்டால், தலையைச் சொறிந்து பார்த்தாலும் அதன் அர்த்தம் விளங்கவில்லை என்று தான் சொல்வேன். உங்களளுக்காவுதல் புரிகிறதா? வலைத் தளத்திலோ அல்லது புத்தகங்களை வாசிப்பவர்களுக்கோ புரிய சந்தர்ப்பம் உண்டு. நண்பர்களே, அதன் விளக்கம் ஒரு விசித்திரமானதாக எனக்குப் படுகிறது. பின்நாட்களில் அதன் உண்மை வெளிச்சமாகிறதை நீங்கள் ஒவ்வொருவரும் உணர்வதில் ஆச்சரியம் இருக்காது.

*உங்கள் வயிற்றை சுமார் 80 சதவீதம் நிரப்புங்கள்* என்பதுதான். நீண்ட ஆரோக்கியமான வாழ்வின் அடிப்படை உண்மைகளில் இதுவும் ஒன்று எனக் கூறுகின்றனர் இந்தப் புத்தகத்தை எழுதிய 2 ஆசிரியர்களும். அப்படியானால் அந்த 80%தை எந்த மீற்றர் மூலம் அளக்கலாம் என்று நீங்கள் யோசிக்கலாம். நம் வயிறு கிட்டத்தட்ட நிரம்பிவிட்டது என்று *நாம் உணரும்போது* சாப்பிடுவதை நாம் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் இந்தக் கூற்று உணர்த்தும் செய்தி ஆகும்.

இந்தப் புத்தகத்தை எழுதிய இரு ஆசிரியர்களும் ஸ்பெயின் நாட்டில் பிறந்தவர்கள். அதில் ஹெக்டர் கார்சியா 10 வருடங்களுக்கு மேலாக ஜப்பானில் வாழ்ந்து வரும் ஒரு உளவியல் ஆராய்ச்சியாளர். ஆரம்ப காலத்தில் இவர் ஒரு கணினிப் பொறியாளர். பின்னாளில் தன் திசையை மாற்றி ஆராய்ச்சி மற்றும் எழுத்தாளன் ஆனார். பிரான்செஸ்க் மிராயியஸ் பலநூல்களை எழுதி சர்வதேச புகழ் பெற்றவர். இருவரும் ஜப்பானில் சந்தித்தபோது இதுபற்றி விவாதித்து, இந்த *இக்கிகய் * தத்துவம் பற்றி மேற்கு உலக நாடுகளுக்கு அறிமுகம் செய்தால் என்ன என்ற சிந்தனைக்கு பதில் தரும் முகமாக எழுதப்பட்டது இப்புத்தகம்.

*இக்கிகய்என்றால் என்ன? ஜப்பானிய மொழியில் *எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது, தரும் மகிழ்ச்சி* என்று பொருள் படும். நாஜி வதைமுகாமிலிருந்து தப்பிவந்த *விக்டர் ஃபிராங்கெல்* கண்டுபிடித்த *லோகோ*சிகிச்சையயைப் போன்றது தான் என்றாலும் அதையும் தாண்டிய ஒரு வாழ்க்கை முறையைக் கொண்டதுதான் *இக்கிகய்** என்று உறுதியாகச் சொல்கிறார்கள் ஆசிரியர்கள்.

நீண்ட கால வாழ்க்கைக்கு பலவிதமான வடிவங்களில் பல செயல் பாடுகளை ஆராய்ச்சியாளர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள், மகான்கள் கூறிய எல்லா அறிவுகளையும் தாண்டி, ஒரு வித்தியாசமான முறையில் தங்கள் வாழ்க்கை முறைகளை ஜப்பானில் உள்ள *ஓக்கினாவா தீவில்உள்ள மக்கள் *இறுதி நாள் வரை சுறுசுறுப்பாக இருங்கள் ** என்ற தத்துவம் உங்களை மிகவும் ஆச்சரியப்படவைக்கும். அதே வேளையில், அதன் உண்மையை இப் புத்தகம் வாசித்து முடிந்ததும் உங்கள் மனதிலும், எண்ண அலைகளிலும் நிட்சயம் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும் என்பதில் சந்தேகமில்லை நண்பர்களே!.

நண்பர்களே! மேலும் இந்ந நூலில் தமிழ் மொழியாக்கம் *PSV குமாரசாமி*யும் மிக அற்புதமாக, வாசிப்போருக்கு அலுப்புத் தட்டாத விதத்தில் சொற்களால் வாசிப்பாளர்களை கவர்ந்திருப்பதும் இங்கு பாராட்டத்தக்கது. அவருக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்..

நண்பர்களே! பல விதமான தத்துவங்கள், கருத்துக்கள், எண்ணங்கள், திறமைகள், முன் உதாரணங்கள், வழிகாட்டல்கள் இருந்தபோதும் ஒவ்வொரு மனிதனும் தனக்கென்று ஒரு *இக்கிகய்* யைத் தெரிவு செய்து அதனை வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் கடைப்பிடித்து வந்தால், நாம் *நீண்ட ஆரோக்கியத்துடன் கூடிய, நீண்ட ஆயுளுடன்* வாழ்வதற்கு ஏற்றதாக நிட்சயம் அமையும் என்பதனை *ஓக்கினாவா*மக்கள் எங்களுக்குத் தரும் அருமையா செய்தியை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

*இக்கிகய்* யின் தத்துவங்களின் விளக்க வரைபடம் கீழ் கண்டவற்றைச் சுட்டுகின்றன.
*1. நீங்கள் மிகவும் நேசிக்கிற ஒன்று*
*2. நீங்கள் மிகுந்த திறமை பெற்றிருக்கின்ற ஒன்று*
*3. உங்களுக்கு வெகுமதியைப் பெற்றுத்தரக்கூடிய ஒன்று *
*4. உலகிற்குத் தேவையான ஒன்று*
இவற்றுடன் தொடர்ந்து செல்லும் நமது பணியில்
*1. ஆழ்விருப்பம்*
*2. இலட்சியப் பணி*
*3. வாழ்க்கைத் தொழில்*
*4. தொழில் முறை வேலை*
இவற்றுடன் தொடர்ந்து பயணித்தால் நாம் எமது இலக்கை அடைய முடியும் என்பதை ஆணித்தரமாக ஆசிரியர்கள் தமது ஆராய்ச்சியின் மூலம் நீரூபிக்கிறார்கள்.

இக்கிகய் மூலம் நாம் ஆரோக்கியமாக 100 வயதையும் தாண்டி எப்படி வாழலாம் என்ற கோட்பாடே முழுக்க முழுக்க பரவிக் கிடப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. எப்படி சுகமாக இருக்கிறீர்களா? என்று நண்பன் ஒருவரைக் கேட்டால், அவரின் பதில் *வயசு போகப் போக எல்லா மூட்டுகளும் நோத்தான்.இது எல்லோருக்கும் பொதுவானது* என்று சொல்லும் பதிலை போட்டு உடைக்கிறது இந்த *இக்கிகய்*தத்துவம்.

உலகிலுள்ள *5 நீல மண்டலங்கள்*இல் 1 வது இடத்தில் ஜப்பான் ஓக்கினாவா இருப்பது குறிப்பிடத்தக்கது.
*நீல மண்டலங்கள்* வரிசையில்
1. ஜப்பானில் ஓக்கினாவா தீவு
2. இத்தாலியில் சார்டீனியா தீவு
3. அமெரிக்காவில் லோமா லின்டா, கலிபோர்னியா
4. கோஸ்டா ரிக்காவில் நிக்கோயா தீபகற்பம்
5. கிறீஸில் இக்காரியா தீவு
இங்கு வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கை முறைகளை இவர்கள் நேரில் சென்று, அவர்களுடன் ஒன்றாகப் பயணித்து, அவர்களுடைய உணவு முறை, உடற்பயிற்சி முறை, இயற்கையுடன் இயைந்து இயல்பாய் வாழும் முறை, அன்றாடம் செய்யும் வேலைகள், சக மனிதர்களுடன் பழகும் விதம், போன்ற பல அரிய தகவல்களை அறிய வேண்டும் என்றால் நூலை வாசியுங்கள். ஆச்சரியப்படுவீர்கள்.

ஓக்கினாவாவில் உள்ள மக்களிடம் இந்த ஆரோக்கிய வளர்ச்சிக்கு மற்றுமொரு முக்கிய காரணம், *அங்கு வளங்களுக்குப் பற்றாக்குறை உண்டு என்பதையும், அதனால் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ள வேண்டிய கட்டாயம் அம்மக்களுக்கு இருக்கிறது* என்பதாகும்.

மேலும் அவர்களது நீ்ண்ட கால வாழ்க்கைக்கு, உணவு பரிமாறப்படும் முறை, உணவு உட்கொள்ளும்போது கடைப்பிடிக்க வேண்டிய நிலை பற்றி மிகத்தெளிவாக சுட்டிக்காட்டி இருக்கிறார்கள் ஆசிரியர்கள்.

*மொவாய்* என்று அழைக்கப்படுகின்ற ஒரு நட்பு வட்டாரத்தின் மூலம் பிறருடன் பகிர்ந்து கொள்ளும் முறையும் மிக முக்கியமான ஒன்று. அன்றாட சில நிமிட உடற்பயிற்சியம், தினமும் மூளைக்கு பயிற்சி கொடுப்பதும் நீ்ண்ட ஆயுளுக்கான அடிப்படை காரணம் என்று கூறப்படுகிறது.

ஒரு புதிய வேலையைத் தொடங்கும் போது நமக்கு சில வேளைகளில் கடுமையானதாக இருக்கும். நாளடைவில் அது பழக்கப்பட்டு நமது எண்ணங்களுடன் சேர்ந்து பயணிக்கின்றது. அதே போல் புதிய நல்ல நண்பர்கள், புதிய விளையாட்டுக்கள், புதிய சிந்தனைகள் போன்றவற்றின் மூலம் இந்த மூப்படையும் செயல் எப்படித் தாமதப்படுத்துகின்றன என்பதை வாசிப்பின் மூலம் அறியலாம்.

மேலும், *மன அழுத்தம்* நீண்ட ஆயுளுக்கு *எதிரி* என்பதன் விளக்கம் மிக அருமையாக தந்திருக்கும் ஆசிரியர், அது எப்படி ஒரு மனிதனை ஆட்டிப் படைக்கிறது,மன அழுத்தத்திற்கும் நமது உடம்பின் தோல் பகுதிக்கும் நிறைய தொடர்பு இருப்பதையும், அதிலிருந்து விடுபடுவது மிக சுலபமானது என்றும், அதற்கு *குகை வாசிகளுக்கும்* *நவீன மனிதர்களுக்கும்* உள்ள வேறுபாட்டை விளக்குகிறார். அதனால் மனித ஹார்மோன்களின் தொழிற்பாடுகள் பற்றியும், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து அறியலாம்.

*நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தால் விரைவில் மூப்படைய வைக்கும்* என்கிற செய்தியைப் படித்துவிட்டு, அதிலிருந்து விடுபடுவது மிக சுலபமானது என்றும் எழுதியுள்ளார். *சரியான முறையில் நித்திரை*அவசியம் என்றும் அதனால் உடம்பில் ஏற்படும் மாற்றங்களை வாசித்து ஆச்சரியம் அடைந்தேன். எவ்வளவு மனக் கஷ்டங்கள் வந்தாலும் சோர்ந்து போகாமல் அதனை சரியான முறையில் கையாள்வது பற்றி வாசிக்கும் போது, நாமும் ஏன் அப்படி முயற்சி செய்து பார்க்கலாம் என்று தோன்றுகிறது நண்பர்களே.!

இங்கே *லோகோ* சிகிச்சை என்றால் என்ன? *உளப்பகுப்பாய்வுசிகிச்சை என்றால் என்ன? இவற்றுக்குமிடையேயான வித்தியாசம், அதனை எப்படிக் கையாள்வது, அது பற்றி *விக்டர் ஃபிராங்கெல் * அவரது அறிவு பூர்வமான விளக்கங்கள், மற்றும் *ஹிட்லரின்* வதைமுகாம் பற்றிய சில அனுபவம், போன்ற பல அரிய தகவல்களும் அறியலாம். இவருடைய சிகிச்சை முறையும் கிட்டத்தட்ட *சிக்மண்ட் பிராயட் ** இன் சிகிச்சை போல் எனக்குத் தோன்றுகின்றது. இதிலிருந்து விடுபடுவதன் மூலமாகவும் நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்று கூறியுள்ளார்.

இதனை விட *மோரிட்டோஎன்ற ஜப்பான் சிகிச்சை முறைக்கும், *மேற்கத்திய உளவியல்* முறைக்கும் உள்ள வேறுபாட்டை விரிவாக ஆய்வு செய்து எழுதுகிறார். மேற்கத்திய சிகிச்சை முறை, *நோயாளிகளின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் அல்லது திருத்துவதில் கவனம் செலுத்துகின்றன.* ஆனால் *மோரிட்டா* சிகிச்சை முறை, *உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதைவிட அவற்றை ஏற்றுக் கொள்ள கற்றுக் கொடுக்கிறது*

நண்பர்களே! எல்லாம் எழுதி விட்டால் வாசிக்கும் உங்கள் ஊக்கத்தை கத்திரிக் கோலால் வெட்டுவது போன்று இருக்கும். இருந்தும், ஒரு செய்தி கூற விரும்புகிறேன்.
நீங்கள் செய்யும் அனைத்திலும் *திளைத்திருக்கும் நிலையை* அடைதல். இது பற்றி ஆசிரியர்கள் அதி நுட்பமான விளக்கங்களைத் தந்துள்ளார்கள். கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம் நண்பர்களே! இத்துடன் சில பிரபல்யமானவர்கள் ஜப்பான் நாட்டை ஏன் நேசிக்கிறார்கள் என்பது பற்றி தந்துள்ள செய்திகள், *தியானம், *சடங்குகள்*. அவர்களுடைய *பசுந்தேனீர்* *ஷிகுவா பழம்*, சமூக வாழ்க்கை, *றேடியோ தாய்ஸோ** இப்படி இன்னும் எழுதிக் கொண்டே போகலாம்.

நண்பர்களே! கண்டிப்பாக எல்லோரும் உள்வாங்கி வாசிக்க வேண்டிய அருமையான புத்தகம்.. மீள் வாசிப்பு செய்வது மிகவும் சிறந்தது என சொல்வேன்.

பொன் விஜி - சுவிஸ்
நன்றிகள்


புதன், 19 மே, 2021

 



புத்தகத்தின் பெயர்:- *13 வருடங்கள்*
ஆசிரியர் :- ராம்சந்த்ரா சிங்
தமிழில் :- இரா. செந்தில்.
பக்கங்கள் :- 207
பதிப்பகம்:- எதிர் வெளியீடு
விலை:- 220/-
வாங்குமிடம்:- செந்தரம் புக்ஸ்
தொலைபேசி :- 8870364620

வணக்கம் நண்பர்களே!,
*கொன்றொழிக்கப்பட்டார்* இதன் அர்த்தம் என்ன? என்று பார்த்தால், *ராம்சந்த்ரா சிங் * ன் மொழியில், கிராம விவசாயிகளை அடிமைகளாக்கி, அவர்களை அடக்கி, அவர்களின் இரத்தங்களைப் பிளிந்து எடுத்த ஒரு மிகப்பெரிய பண்ணையாரின் சரித்திரத்தையே முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட சம்பவம் என்கிறார்.

ஒரு *நக்ஸலைட்* எப்படி உருவாகிறான். அவர்களது அடிப்படை நோக்கங்கள் என்ன? எப்படிப் பட்ட கொள்கையின் பால் அவன் ஈர்க்கப்படுகிறான், அது 1970 ன் காலகட்டங்களில், அதன் உத்வேகம் எப்படிகம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் ஆகியோரின் பங்களிப்பு எந்த வகையில் இவர்களை ஊக்குவிக்கின்றன, போன்ற பல நுட்பமான சம்பவங்களை இந்த *13 வருடங்கள் சிறையில் என்ற *ராம்சந்த்ரா சிங் * கின் நாட்குறிப்பில், இந்திய சிறைகளில் *கொடுமைகளை* எழுதுகிறார்.

*ராம்சந்த்ரா சிங்* எதற்காக சிறைக்குச் சென்றார்.? தனது 14 வது வயதில் பாடசாலையில் படித்துக் கொண்டு இருந்த நிலையில், 1960 ல் *பார்ட்டி பச்சா* ஆனார். (கட்சிப் பையன்) பின் சிபிஐ (எம்) செயல்பாட்டாளர் ஆனார். அதனைத் தொடர்ந்து மாவட்டக் கமிட்டி உறுப்பினர் பதவி. 1970ல் ஏழை மற்றும் வறிய விவசாயிகளை நடுங்க வைத்த ஓரு பணம் படைத்த பண்ணையார் மீது 12 பேர்கள் கொண்ட குழு நடத்திய தாக்குதலில் பண்ணையார் கொல்லப்பட்டதுடன் அனைவரும் அந்தக் கிராமத்து மக்களால் பிடிக்கப்பட்டானர். அதில் *ராம்சந்த்ரா சிங் * உம் ஒருவர். அப்போது அவருக்கு வயது 21. *நக்ஸலைட்*என்ற அமைப்பின் தீவிர கொள்கைகள் பற்றி அடிமட்ட கிராமிய மக்களுக்கு தகுந்த விளக்கம் இல்லாதபடியால்தான் இப்படி ஒரு விபரீதம் நடந்ததைப் பின்னாளில் குறிப்பிடுகிறார் ராம்சந்த்ரா சிங்.

1970 முதல் 1983 வரை தான் விடுதலையாகும் வரை நடந்த சம்பவங்களே இந்த *சிறைக் குறிப்புகள்*
1970 ல் சிறை தண்டனை பெற்ற ராம்சந்த்ரா சிங் தனது *டயறிக்குறிப்பை* 1975 ல் தான் ஆரம்பிக்கிறார். அவர் சிறையில் இருந்தபடியே தனது கட்சிப்பிரமுகர்களால் மிக மிக இரகசியமான முறையில் கடத்தப்பட்டு, அவர் விடுதலை அடைந்த பின் 1984 ல் *ஷான்-இ-சஹாரா*பத்திரிகையில் முதன் முதலாக தொடர்சம்பவமாக வெளிவந்து பாராட்டைப் பெற்றது.

*ஷிவ்நாத் திரிவேதி* யின் தலைமையில் நடைபெற்ற கொன்றொழிப்பில் ஷிவ்நாத் திரிவேதிக்கு மரணதண்டனையும் ஏனையோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்படுகிறது.

நண்பர்களே! ஆயுள் தண்டனையில் இருந்து பல கொடுமைகளை அனுபவித்த ராம்சந்த்ரா சிங் எப்படி வெளியே வருகிறார், அங்கு நடந்த அக்கிரமங்கள், லஞ்சம், பாலியல் துன்புறுத்தல்கள், சாப்பாடு, மனவிரக்திகள், உடைகள், படுக்கை அறைகள் இது போன்ற பல அறியப்படாத சம்பவங்களை கண்ணீருடன் தருகிறார் *ராம்சந்த்ரா சிங் *

எனது வாசிப்பின் மூலமாக பல அறியப்படாத செய்திகளை வாசித்து மனம் வருந்தினேன். குறிப்பாக சிறையில் நடைபெறும் மிருகத்தனமான நடைமுறைகளும் அதற்கும், சாதி, மதம், பார்பன கைதிகளின் பங்கு, மேல் சாதி, கீழ் சாதி போன்றன மிகப் பயங்கரமாக தலை தூக்கி நிற்பதைக் காணக்கூடியதாக உள்ளது.

சிறையில், அரசியல் கைதிகள் வேறு கொலைக் குற்றங்கள் செய்தோர் வேறு எனப் பிரிவுகள் உள்ளதாயும், இதனைக் கூட பிரித்தானியா ஆட்சியின் போது அது எப்படி அமூல்படுத்தப்பட்டது என்ற விபரத்தையும் இங்கே ராம்சந்த்ரா சிங் விபரிக்கிறார்.

அங்கு சாப்பாட்டில் நடைபெறும் துப்பரவு அற்ற புழுக்கள் நிறைந்த உணவு, பல நாட்கள் இருந்து அழுகிப் போன பழங்கள், காய்கறிகள், கஞ்சி என்ற பெயரில் ஒருவகை மணத்துடன் வரும் சூப், இவற்றைக் கண்டிப்பாக சாப்பிட வேண்டும். இல்லையேல் அடி, உதை, குத்து எது என்றாலும் எதிர்பாராத நிமிடங்களில் நடக்கும். கடுமையான தண்டனைகளில் ஒன்று, *வேப்பமரத்தில் தலைகீழாக் கட்டி தொங்கவிட்டு அவர்கள் விரும்பிய இடங்களில் தடியால் அடி* நினைத்தாலே என்னவோ செய்யும் நண்பர்களே!

இது பற்றிய பல அரிய உண்மைத் தகவல்களை மிகத் துல்லியமாக எழுதுகிறார் ராம்சந்த்ரா சிங் அவர்கள். வாசித்து இந்திய சிறைக் கூடத்தின் சிறப்புகளை(கொடுமைகளை) அறியவேண்டியது அவசியம் எனத் தோன்றுகிறது.

*நெல்சன் மண்டேலா, காந்தி* போன்றோரும் சிறையில் இருந்துதான் நாட்டுக்கு நல்லது செய்தார்கள் என்று நாம் அறிந்திருக்கிறோம். அங்கே தான் ஆழமாக நாம் பார்க்கவேண்டும் என்றும், அவர்கள் அரசியல் கைதிகள், அவர்களுக்கு வேண்டிய சகல வசதிகளும் செய்து தரப்படும். புத்தகம் வாசிப்பதில் இருந்து, எழுதவோ, கலந்து உரையாடவோ, தனது நியாயத்தை எடுத்துக் கூறவோ முடிந்தது. ஆனால் அரசியலல்லாத குற்றச் செயல் செய்தோரின் சிறைக் கூடங்களின் இரகசியங்கள் வெளிவர வாய்ப்பே இல்லை என்று தனது அனுபவங்களை பகிர்கிறார் ராம்சந்த்ரா சிங்.

அத்துடன் சில குறிக்கப்பட்ட நாட்களிலேயே பல தடவைகள் பல சிறைச் சாலைகளுக்கு மாற்றப்படுவதும் சர்வசாதாரணமான நிகழ்வாகும். சிறை அதிகாரிகளின் அடாவடித்தனங்களும், கைதிகளைப் பார்க்க வரும் உறவினர்களிடம் நடந்துகொள்ளும் முறைகளும் மிக வேதனை அளிக்கிக் கூடியதாக உள்ளது. இது போன்ற பல விடயங்களை... நண்பர்களே வாசியுங்கள்..

*ராம்சந்த்ரா சிங் * தான் காதலித்த பெண் இறுதி வரை இருப்பாள் என்றிருந்த தனது கற்பனைகளை, அவள் வேறுதிசையில் மாற்றியது குறித்து மிகவும் வேதனையுடன் பகிர்ந்து கொள்கிறார். நண்பர்கள்உறவினர்களின் மாற்றத்தையும் உணர்கிறார்.

1975 ல் எமேஜன்சீஸ் காலகட்டத்தில் ஏற்பட்ட சிறை அனுபவங்களும் இங்கு குறிப்பிடத்தக்கது. அதில் பல கைதிகள் சிறைக்குள்ளேயே சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இறுதியாக 1983 ல் *ராம்சந்த்ரா சிங்* சிறையில் இருந்து வந்தபின்னர் *பங்கார்மா* வில்அவரைப் *எஸ். ஆனந்த்* பேட்டி எடுத்து (20.01.2017 ல்) அதனையும் இந்நாவலில் இணைத்திருப்பது மேலும் சிறப்பாக உள்ளது. அவரது கடைசிக் கால குடும்ப
வாழ்க்கை, அரசியல், பத்திரிகை எழுத்தாளர்கள் எல்லாவற்றையும் நினைவு படுத்துகிறார்.

இந் நாவலைத் தமிழில் மொழிபெயர்த்த ஆசிரியர் *இரா. செந்தில்* மிக அற்புதமாக செய்திருக்கிறார். வாழ்த்துக்கள்.. வாசிப்போர் இலகுவாகப் புரியும் படி நகர்த்துகிறார். *ராம்சந்த்ரா சிங்* .. 2018 ல் தனது 69 வயதில காலமானார்..

நண்பர்களே!, *ஒரு நாள் என்பது ஒரு வருடத்திற்கும், ஒரு வருடம் என்பது ஒரு யுகத்திற்கும் சமமானது* என்பதற்கு இந்திய சிறைச்சாலைகள் சொல்லும் படங்கள்தான் என்ன? அதிரவைக்கும் பல சம்பவங்களை அறிய இன் நாவலை வாசியுங்கள்.
நன்றிகள்.
பொன் விஜி - சுவிஸ்